திருவையாறு ஐராப்பர் கோவிலில் திருவாதிரை விழா : நடராஜர் சுவாமிக்கு பூ போடும் உற்சவம்
தஞ்சாவூர், திருவையாறு ஐராப்பர் கோவிலில், திருவாதிரையை முன்னிட்டு, நடராஜர் சுவாமிக்கு பூ போடும் உற்சவம் நடந்தது. 
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஐராப்பர் கோவிலில், தெற்கு கோபுர வாசலில் அமைந்திருக்கும் ஆட்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு  உற்சவம் நடந்தது. இதையடுத்து நேற்று(5ம் தேதி) இரவு ஆட்க்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு பால்,தயிற், தேன், சந்தனம், மஞ்சள் போன்ற திரவிய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்  நடந்தது. இன்று காலை (6ம் தேதி) வட மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிவகாமசுந்தரி ,நடராஜர் சிறப்பு அலங்காரத்தில், சன்னதியில் இருந்து புறப்பட்டு  ஆட்கொண்டார் சன்னதி வந்தடைந்தார்.  புஷ்ப மண்டப படித்துறை காவேரி ஆற்றில், அஸ்ரதேவருக்கு பால், தேன், சந்தனம் போன்ற மங்கள பொருட்களை கொண்டு தீர்த்தவாரி நடந்தது. பிறகு நடராஜர் பெருமானுக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டு பூ போடும் உற்சவம் நடந்தது. தொடர்ந்து வீதியுலா ஊடல் உற்சவத்துடன் சுவாமி சன்னதிக்கு சென்றனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.