டி.புதுப்பட்டி முனியாண்டி கோவில் திருவிழா : பக்தர்களுக்கு அசைவ உணவு பிரசாதம்
திருமங்கலம்: திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களின் குலதெய்வமான ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயிலில் 56 வது ஆண்டு பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முனியாண்டி சுவாமி பூஜை விழா ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்து குடும்பத்தினருடன் டி.புதுப்பட்டியில் ஒன்று கூடினர். பெண்கள் நேற்று முன்தினம் மாலை கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமிக்கு மலர் அபிஷேகமும் செய்ய மலர் தட்டுக்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பால்,பன்னீர், தேன் உள்ளிட்ட16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு ஊர்வலமாக எடுத்து வந்த தேங்காய், பழம்,மலர் மாலை உள்ளடக்கிய தட்டுக்களை சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அன்று இரவு பக்தர்களுக்கு சைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் 100 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு சமைக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.