உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களக்காட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் வனபோஜன உற்சவம்

களக்காட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் வனபோஜன உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளிய வனபோஜன உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்திற்கு செல்லும் வனபோஜன உற்சவம் ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும். இந்த உற்சவம் நேற்று நடந்தது. இதற்காக பெருமாள் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டார். செல்லும் வழியில் சின்ன அய்யன்குளம், அண்ணா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மண்டகப்படி நடந்தது. இதையடுத்து காலை 10:00 மணிக்கு களக்காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் வரதர் எழுந்தருளினார். அங்கு மண்டகப்படி நடந்தது. ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் முடிந்ததும், கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அந்தந்த தெருக்களில் மக்கள் காத்திருந்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பெருமாளை தரிசனம் செய்தனர். மதியம், 1:30 மணிக்கு களக்காட்டூர் கிராமத்தில் இருந்து வரதர் புறப்பட்டு பாலாற்றுக்கு சென்றார். பாலாற்றில் எழுந்தருளிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அலங்காரம் முடிந்து ஆற்றில் இருந்து புறப்பாடு நடந்தது. செல்லும் வழியில் ஸ்ரீரங்கராஜவீதி பகுதியில் மண்டகப்படி முடிந்து இரவு பெருமாள், கோவிலை சென்றடைந்தார். வனபோஜன உற்சவத்தின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !