உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: காரமடையில் ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.காரமடையில் சிறுமுகை ரோட்டில், மிகவும் பழமையான ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதை அடுத்து கடந்த, 25ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, கோபுர கலசம், முளைப்பாலிகை, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில், முதல் கால யாக பூஜை துவங்கியது. 26ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து கோபுர கலசம் அமைத்தல், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், மூல மந்திர ஹோமம் நடந்தது. இவ்விழாவில் கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமியும் பங்கேற்றனர். நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், யாகசாலையில் இருந்து மூலவர் திருமேனிக்கு, அருள் சக்தி நிறைவு செய்தல் நடந்தது. பின்பு தீர்த்த கலசங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அஸ்வின் சிவாச்சாரியார் கோபுர கலசத்திற்கும், சுவாமிக்கும் தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !