உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று மத்வ நவமி

இன்று மத்வ நவமி

ஆஞ்சநேயர் என்றால் தெரியாதவர் உண்டோ ..!! ஆனால் மத்வாச்சார்யார் என்றால் யார் ? மகான் ஸ்ரீராகவேந்திரருடைய, ஆதி குருவே ஸ்ரீமத்வர் ஆவார். ஹனும, பீம, மத்வ இதுவே ஸ்ரீமத்வரின் பூர்வ அவதாரங்கள்! த்வைத மதத்தை நிறுவியவர் ஸ்ரீமத்வர். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே உள்ள பாஜகஷேத்திரம் என்ற சிற்றூரில், பட்டராகப் பணி புரிந்த மத்யகேச பட்டர் வேதவதி தம்பதியருக்கு மகனாக பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆக்ஞைப்படி, பரமாத்மாவிற்கும், ஜீவாத்மாவிற்கும், உள்ள தொடர்பை, கலியுகத்திற்கு உணர்த்தும் பொருட்டு, கலியுகத்தில் ஸ்ரீமத்வராக, கிபி 1238-ம் வருடம், விஜயதசமி சுப நாளில், கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே பாஜகஷேத்ரம் என்னும் திருத்தலத்தில்  அவதரித்தார்.  

ஏழு வயதிலேயே வாசுதேவனுக்கு உபநயனம் நடந்தது. பின் ஒரு பெரிய மகான் வாசுதேவனின் கைரேகையை பார்க்கவே “வருங்காலத்தில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளி வீசுவார்” என்று கூறினார்.

அதுவே பிற்காலத்திலும் நடந்தது.

மத்வர் சிறு வயதாக இருக்கும் போது கடன் வசூலிப்பவர் ஒருவர் தன் பணத்தை பெறுவதற்காக மத்வரின் வீட்டிற்கு சென்றார்.

அவரது தந்தையிடம் கடனை திருப்பி கேட்டார்.

தர முடியாமல் போகவே அது கண்டு மத்வர் வீட்டிற்கு உள்ளே சென்று புளியங்கொட்டைகளை எடுத்துக்கொண்டு கடன்காரரிடம் கொடுக்கவே அனைத்தும் தங்க காசுகளாக மாறின.

ஆச்சரியதோடு பார்த்தார் கடன்கொடுத்தவர்.

அந்த சிறுவனே மத்வாச்சாரியாராக தன் பிற்காலங்களில் உருவெடுத்தார்.

மத்வ சித்தாந்தங்களுக்கு முகவரி கொடுத்த மகான் அவர்.

அத்வைதத்திற்கு சங்கரரைப் போல், விக்ஷிஸ்டாத்வைத்திற்கு ஸ்ரீராமனுஜரைப் போல், த்வைத கொள்கைகளை பரப்புவதற்கு இந்த கலியுகத்தில் அவதாரம் எடுத்தார் ஸ்ரீமத்வர். “மத்வர்” என்ற சொல்லுக்கு “யாராலும் வெல்ல முடியாதவர்” என்ற பொருள்.

இவர் இயற்பெயர் வாசுதேவன்.

அற்புதங்கள் செய்த வாசுதேவன் தமது பத்தாம் வயதில் துறவறம் மேற்கொள்ள எண்ணினார்.

இதனை விரும்பாத பெற்றோருக்கு வேறு ஒரு மகன் பிறக்கும் வரை துறவறம் பூணும் திட்டத்தை ஒத்தி வைப்பதாக வாக்களித்தார் வாசுதேவன்.

அவருக்குத் தம்பி பிறந்தவுடன் துறவறம் மேற்கொண்டார்.

உடுப்பியில் அச்யுத பிரேக்ஷாச்சாரியார் என்ற குருவிடம் சந்நியாச தீட்சை பெற்று, ஆனந்த தீர்த்தர் என்ற நாமத்துடன் வேத, உபநிஷத்துக்களை மிக வேகமாக கற்றுத் தேர்ந்தார் வாசுதேவன்.

பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்ட ஆனந்தத் தீர்த்தர், பத்ரி ஷேத்திரத்தில் பகவத் கீதைக்குக் கீதாபாஷ்யம் விளக்கவுரை எழுதினார்.

இந்த உரையை குரு ஸ்ரீவியாசரிடம் சமர்ப்பித்தபோது, ஒரே ஒரு திருத்தம் மட்டுமே செய்து அந்த விளக்க உரையை ஆமோதித்ததாக மத்வ விஜயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தம் என்னவென்றால், உரையின் ஆரம்பத்தில் ஆனந்த தீர்த்தர் தன் `சக்திக்குத் தகுந்த` என்று குறிப்பிட்டிருந்த சொற்களுக்குப் பதிலாகப் பூரணமாக என மெருகேற்றினாராம் குரு ஸ்ரீவியாசர்

இவரே த்ரேதாயுகத்தில் ஹனுமனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்தார்.

துவாபாரயுகத்தில் பீமனாக அவதரித்து ஸ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்தார்.

பின்பு கலியுகத்தில் மாத்வாச்சாரியராக அவதரித்து வேதவ்யாச சேவை செய்தார்.

இவர்  பரமாத்வாவுக்கும், ஜீவாத்மாவுக்கும்  உள்ள தொடர்பை, த்வைதம் என்னும் சித்தாந்தத்தை ஏற்படுத்தி,  அதன் மூலம் (Dualism Philosophy) –  வலியுறுத்தினார்.

இவர் பத்ரிகாஷ்ரமத்தில் தங்கியிருந்த சமயத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான, ஸ்ரீவேதவ்யாசரிடம் பாடம் பயின்று, அவருடைய  அருளினால் ப்ரம்ம சூத்ர பாஷ்யம் உட்பட 37 கிரந்தங்களை இயற்றினார்.

இவை சர்வ மூல க்ரந்தம் என கொண்டாடப்படுகிறது.

இவர் ஒரே நேரத்தில், ஹனுமனாக ஸ்ரீராமருக்கும், பீமனாக ஸ்ரீகிருஷ்ணருக்கும், ஸ்ரீமத்வராக ஸ்ரீவேதவ்யாசருக்கும், பூஜை செய்வதைப் பார்த்த  ஸ்ரீத்ரிவிக்ரம பண்டிதாசாரியார் என்னும் அத்வைத பண்டிதர் இவருடைய சிஷ்யர், உடனே அங்கேயே “ஸ்ரீஹரி வாயு ஸ்துதி” என்னும் ஸ்தோத்திரத்தை இயற்றினார்.

இது மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம். இதை பக்தியுடன் பாரணை  செய்பவர்களின் சகல மனோ பீஷ்டங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய அற்புத மந்திரமாக விளங்குகிறது.

(ஸ்ரீத்ரிவிக்ரம பண்டிதாசாரியார் மிகச்சிறந்த அத்வைத பண்டிதராக விளங்கி, ஸ்ரீமத்வருடன் ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை 15 நாட்கள் வாதம் புரிந்து, இறுதியில் த்வைத சித்தாந்தமே சரியானது என ஒப்புக் கொண்டு ஸ்ரீமத்வரின் சிஷ்யரானவர்).

உலகப்பிரசித்தி பெற்ற, உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுள்ள, கடகோல் கிருஷ்ண விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தவரும், அந்த விக்கிரகத்தை பூஜை செய்வதற்காகவே  அஷ்ட (எட்டு) மடங்களை  உருவாக்கி, ஒவ்வொரு மடத்திற்கும் ஒரு சந்நியாசியை நியமனம் செய்து, இரண்டு மாதத்திற்கு ஒரு மடம் பூஜை செய்யுமாறு  அமைத்தவரும் ஸ்ரீமத்வரே ஆவார். பின்பு, இந்த பூஜை மாற்றும் முறை, இரண்டு மாதங்களிலிருந்து, இரண்டு வருடங்களாக, அவருடைய சிஷ்ய பரம்பரையில் வந்த மகான் ஸ்ரீவாதிராஜரால் மாற்றி அமைக்கப்பட்டது..

ஆனந்த தீர்த்தரின் முதல் படைப்பான கீதாபாஷ்யத்தைத் தொடர்ந்து, ப்ரம்ம சூத்திரம் என்ற வியாசரின் படைப்புக்கு முற்றிலும் புதிய உரை எழுதினார்.

பத்ரிகாஷ்ரமத்தில் வேதவ்வியாசரை மறுபடியும் கண்டு வணங்கித் தன் பாஷ்யத்திற்கான ஒப்புதலையும் பெற்றார்.

பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் செய்த ஸ்ரீமத்வாச்சாரியாரிடம், பல பண்டிதர்கள் வாதப் பிரதிவாதங்கள் செய்து, தோல்வியுற்றதால், அவரது சீடர்களானார்கள்.

முப்பத்திரண்டு லட்சணங்கள் கொண்ட ஸ்ரீமத்வரிடம் சோபனபட்டர், சாமாசாஸ்திரி ஆகிய அத்வைத பண்டிதர்கள் சரணடைந்து, முறையே பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் என்ற பெயர்களுடன் சீடர்கள் ஆனார்கள்.

ஸ்ரீமத்வர் ஒரு முறை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது பெரும் புயல் வீசியது.

அப்போது கரை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல் கடல் நீரினால் அலைக் கழிக்கப்பட்டு மூழ்க இருந்தது.

அதில் உள்ளப் பயணிகளின் கூக்குரலைக் கேட்டு தியானம் கலைந்த மத்வர், அவர்களைக் காக்கக் கோரித் தனது குருவை மனதால் வணங்கினார்.

குருவருளும் இவரது தவ வலிமையும் சேர்ந்து கப்பலில் இருந்த வியாபாரிகள் காப்பாற்றப்பட்டார்கள்.

வியாபாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீமத்வருக்கு விலை மதிப்பில்லாத பொன்னும் பொருளும் வழங்க முன்வந்தனர்.

அவற்றை வாங்க மறுத்த ஸ்ரீமத்வர், அக்கப்பலில் இருந்த பாறை போன்ற பொருளை மட்டுமே கேட்டுப் பெற்றார்.

அப்பாறையில் கோபி சந்தனத்தால் மறைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை வெளிக்கொணர்ந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார் அதுதான் இப்போது இருக்கும் உடுப்பி கிருஷ்ணர்.

த்வைதம் என்று பரவலாக அழைக்கப்படும் ஸ்ரீமத்வ மத சித்தாந்தம், உலகம் யாவையும் உண்மையானது; மாயத் தோற்றம் அல்ல என்கிறது.

பக்தியால் மோட்ச நிலையை அடைய முடியும் என இம்மதக் கோட்பாடு தெரிவிக்கிறது.

மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன.

அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப் பிரசித்தி பெற்றது.

ஸ்ரீமத்வாச்சார்யர் மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக இருந்தவர்
ஸ்ரீவிஜயீந்திரர்.

கி.பி. 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இந்த மத்வ பீடத்தை அலங்கரித்தவர்.

இவரும், மகான் அப்பய தீட்சிதரும் சமகாலத்தவரே.

சிற்சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் வாத- பிரதிவாதங்கள் புரிந்தாலும் இவர்களிடையே ஒருவித சிநேக மனப்பான்மை இருந்தது.

விஜயீந்திரரின் வாதத் திறனை பிறரிடம் மனம் திறந்து பாராட்டுவார் சிவனின் அம்சமான அப்பய தீட்சிதர்.

ஸ்ரீராகவேந்திரரின் பரமகுருவாக விளங்கியவர் இவர்.

அதாவது, குருவின் குரு.

ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர்.

இவரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர்

இந்த ஸ்ரீவிஜயீந்திரரின் குரு வியாசராஜ தீர்த்தர்.

இவர் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் இவர். ரத்தினத்தைப் போல் ஜொலிக்கக் கூடிய 104 நூல்களை எழுதியவர்.

ஸ்ரீ வியாசராஜர் அபாரமான ஞானம் மற்றும் அசாத்தியமான திறமையைத் தன்னகத்தே கொண்டவர்.

ஜெயதீர்த்தர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோர் ஸ்ரீமத்வாச்சாரியாரின் வழியில் தோன்றிய தன்னிகரற்ற மகான்கள்.

பிரம்மம், பிரபஞ்சம், ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் த்வைதம். பிரம்மமே பிற அனைத்தும் என்கிறது.  

பிரம்மம் நாம் காணும், அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிருப்பு என்பது த்வைதத்தின் கொள்கை.

கிபி 1317-ம் வருடம், மாக மாத, சுத்த நவமியன்று, தனது சிஷ்யர்களுக்கு  ஐதரேய உபநிஷத்தின், தாத்பர்யத்தை விளக்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது பல்வேறு வகையான சுகந்தப் புஷ்பங்கள் பொழிந்து அவரை மூடிக் கொண்டன.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு,   அவருடைய சிஷ்யர்கள் அந்த புஷ்பங்களை விலக்கிப் பார்த்த போது, ஸ்ரீ மத்வர் அங்கு காணப்படவில்லை! அவர் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு
உடுப்பி பகுதியும் அனந்தாஸனா திருக்கோயிலின் கருவறையில் ஒரு சிறு மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில் தான் தனது 79-வது வயதில் மத்வர் மறைந்தார்.  

ஸ்ரீமத்வருக்குப் பின், அவரைப் பின்பற்றி   பல்வேறு சக்திவாய்ந்த மகான்கள்  அவதரித்தனர், அவர்களில் ஒருவரே தமிழ்நாடு புவனகிரியில் பிறந்து, கும்பகோணத்தில் சந்நியாச வாசம் செய்து, மந்த்ராலயத்தில் ஜீவ ப்ருந்தாவனம் அடைந்த அற்புத மகான்  
ஸ்ரீராகவவேந்த்ரர்.        

மத்வரின் மங்களா சரண ஸ்லோகம் :

அப்ரமம் பம்கரம் ஹிதம் அஜடம் விமலம்ஸதா
ஆனந்த தீர்த்த மதுலம் பஜே தாபத்ரயாபஹம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !