உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

தஞ்சாவூர், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க கோவிலில் தைப்பூச பெருவிழா கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினமும் யானை, சிம்மம், பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 30ம் தேதி சகோபுரம் வெள்ளி ரிஷப வாகனக் காட்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(03ம் தேதி) நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு, சுமார் 500 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்குமேல், விநாயகர், சுப்பிரமணியர், மகாலிங்க சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமி என ஐந்து தேரோட்டம் வீதியுலா நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் விளங்கிட, ஓதுவா மூர்த்திகள் தேவார திருவாசக பதிகங்களுடன், சிவ வாத்தியங்கள் இசைத்திட இடை மருதா., மகாலிங்கா., என்ற கோஷத்துடன்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை (4ம் தேதி )பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரிக்கு எழுந்தருளி மதியம் 12:00க்கு மேல் 1:30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளிரத காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !