மாமல்லன் ஜெயந்தி விழா
ADDED :1011 days ago
மாமல்லபுரம், : மாமல்லபுரத்தில் பல்லவர் கால நினைவுச் சின்னங்கள் உள்ளன. மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் மல்யுத்த வீரராக திகழ்ந்து, மாமல்லன் என பெயர்பெற்றதால், மாமல்லபுரம் என பெயர் பெற்றது. சைவ நெறிகளை பின்பற்றி அரசாட்சி நடத்தியும், சிற்பக் கலைகள் படைத்தும் புகழ்பெற்றவருக்கு, ஜெயந்தி விழா நடத்தப்படவில்லை. இதையடுத்து, ஆர்வலர்கள், அவர் பிறந்த தை மாத சுவாதி நட்சத்திர நாளில், ஜெயந்தி விழா கொண்டாட முடிவெடுத்து, கடந்த ஆண்டு முதல் முறையாக விழா கொண்டாடினர். இரண்டாம் ஆண்டாக, நேற்று நடந்தது. மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம், மல்லிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தினர். அரசு சிற்பக் கல்லுாரி பழைய வளாகம், புறவழி சந்திப்பு பகுதிகளில் உள்ள மாமல்லன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.