உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கப்பூரில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் திறப்பு

சிங்கப்பூரில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் திறப்பு

சிங்கப்பூர், தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து, பக்தர்கள் தரிசனத்துக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தமிழர்களால், 200 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீமாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், கடந்த ஒரு ஆண்டாக பல கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இந்த கோவிலில், தமிழகத்தில் இருந்து வந்த ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையிலான சிற்பக் கலைஞர்கள் புதிதாக 12 கடவுள் சிலைகளை வடிவமைத்தனர். கோவில் கருவறை, கோபுரம் ஆகியவையும் புனரமைக்கப்பட்டன. ஒரு ஆண்டாக நடந்து வந்த இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, பக்தர்கள் தரிசனத்துக்காக கோவில் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பலத்த மழை பெய்தபோதும், இந்த நிகழ்வில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில், சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பங்கேற்றார். சிங்கப்பூரில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். ஒரு மதத்தினர் நடத்தும் நிகழ்ச்சியில், மற்ற மதத்தினர் பங்கேற்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்கின்றன, என, லாரன்ஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !