ஓமந்தூர் பெருமாள் கோவில் திருப்பணி 84.25 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் வைகுந்த நாராயண பெருமாள் கோவில் திருப்பணிக்கு தமிழக அரசு 84.25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் (நேற்று முன்தினம் காலை ) நடந்தது.திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வைகுந்த நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள கோவிலை புதுப்பிக்க கிராம பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் திருப்பணிக்கு, அரசு சார்பில் 84.25 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்த கோவிலுக்கு பரம்பரை அறங்காவலராக இருந்தார். தற்போது அவரது பேரன் பத்ரி நாராயணன் அறங்காவலராக உள்ளார்.கோவிலின் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பத்தடி உயரத்தில் அழகாக அமர்ந்த நிலையில் பெருமாள் அருள் பாலித்து வருகிறார். மற்ற சன்னதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. விரைவில் திருப்பணிகள் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக, பாலாலய பூஜைகள் கடந்த 5ம் தேதி காலை கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் பத்ரி நாராயணன், ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டனர். கோவிலில் மூலவர் விமான கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.