ரூ.180 கோடி கபாலீஸ்வரர் கோவில் இடம்: மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை : சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 "கிரவுண்ட் இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன.
மீட்பு: இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 "கிரவுண்ட் இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது:மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 "கிரவுண்ட் சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 "கிரவுண்ட் நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 "கிரவுண்ட் இடத்தில், 46 "கிரவுண்ட் இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 "கிரவுண்ட் இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார்.
உறுதிமொழி: இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: மொத்தம் உள்ள, 76 "கிரவுண்ட் இடத்தில், 30 "கிரவுண்ட் இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 "கிரவுண்ட் இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 "கிரவுண்ட் இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரூ.456 கோடி: இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, "கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 "கிரவுண்ட் இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய்.இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நடந்தது என்ன? : கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 "கிரவுண்ட் இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, "கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 "கிரவுண்ட் இடத்தில் இருந்து, 30 "கிரவுண்ட் இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.
மேல்முறையீடு : ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 "கிரவுண்ட் நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, "இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 "கிரவுண்ட் இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.