பேரூர் சாந்தலிங்க பெருமான் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் உள்ள சாந்தலிங்க பெருமான் மற்றும் அம்பலவாணர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
தமிழகத்தின் மிகவும் பழமையான மடங்களில் ஒன்றாகவும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமடமான பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், அம்பலவாணர் மற்றும் ஆதிகுரு முதல்வர் சாந்தலிங்க பெருமான் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 23ம் தேதி, வேள்வி வழிபாட்டுன் துவங்கியது. நாள்தோறும் காலை முதல் மாலை வரை பன்னிரு திருமுறை முற்றோதல் நடந்தது. கடந்த, 27ம் தேதி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் புனித நீர் எடுத்துவரப்பட்டது. 28ம் தேதி, மூத்த பிள்ளையார் வேள்வி, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று, முப்பெரும் தேவியர் வேள்வி, முதற்கால வேள்வி நடந்தது. இன்று, இரண்டாம் கால வேள்வி மற்றும் மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. நாளை காலை, 8:00 மணி முதல் 9:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.