நல்லோர்கள் சேர்க்கையுடன் வாழ்வது சிறப்பு :சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதர் பேச்சு
மதுரை :நல்லோர்கள் சேர்க்கையுடன் வாழ்வது சிறப்பு என மதுரையில் நடந்த சொற்பொழிவில் சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதர் பேசினார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளையில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்ஸவத்தை முன்னிட்டு சேங்காலி புரம் ஸ்ரீ தாமோதர தீட்சிதர் தொடர் சொற்பொழிவு நடந்தது. நரசிம்ம அவதாரம் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: ஸ்திரம் காட்டிய வழியில் நாம் செல்ல வேண்டும். நமது பாரத நாடு 56 தேசங்களை உள்ளடக்கியது. நமது ஹிந்து மதத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை அக்னிசாட்சியாக காரியங்கள் நடக்கிறது. நாம் எது நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இரை தேடுவதோடு இறைவனையும் தேடு. இறைவனை இடைவிடாது தியானித்தால் இறையருளுடன் இறை நிலையை அடையலாம்.
நித்திய பயிற்சியால் நம் மனது கட்டுப்படும். உலகில் கெட்டது என்று எதுவும் கிடையாது. பாம்பின் விஷமே மருத்துவ குணம் உடையது அசுரர்களிடமும் நல்லவர்கள் உள்ளனர்.
இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பேதம் கிடையாது. ஒரே நிலத்தில் விளையும் வேம்பு கசக்கிறது. கரும்பு இனிக்கிறது. அதைப்போல இறைவனாகிய நிலத்தில் இரு விதமான குணங்களுடன் மனிதன் வாழ்கிறான். ஆகையால் நல்ல விதையாகிய நல்லோர்கள் சேர்க்கையுடன் வாழ்வது சிறப்பானது. அசுர வம்சத்தில் இரண்ய கசிபுவுக்கு நான்காவது குழந்தையாக பிரகலாதன் பிறந்தார். இரண்யகசிபு பிரம்மனிடம் மனிதனாலும் மிருகத்தாலும் , பகலிலும் இரவிலும், வீட்டின் உள்ளிலும் வெளியிலும், எந்தவிதமான ஆயுதத்தாலும் எனது மரணம் நேரக்கூடாது என வரம் பெற்று இருந்தார். பிரகலாதன் நாராயணன் ஒன்றே பரப்பிரம்மம் என்று தன் தாய் வயிற்றிலே இருக்கும்போதே உபதேசம் செய்யப்பட்டு வளர்ந்து வந்தார். அதனாலேயே அவர் நாராயணன் நாமமே நம்மை காக்கும் எனும் திட நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார். தன் மகனே ஆனாலும் தன்னை வழிபடாத காரணத்தால் பல வழிகளில் இரண்யகசிபு பிரகலாதனின் உயிரை கொல்ல முயற்சி செய்தும் இறையருளால் மீண்டு வந்தார். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனும் பிரகலாதனின் நம்பிக்கைக்கு இறைவன் நாராயணன் துாணை பிளந்து கொண்டு வந்து இரண்ய கசிபுவை வதம் செய்து பிரகலாதனுக்கு அருள் செய்தார். கோபத்தில் இருந்த நரசிம்மனை மகாலட்சுமி சாந்தப்படுத்தி லஷ்மி நரசிம்ம மூர்த்தியாக பிரகலாதனுக்கும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள் புரிகிறார், என்றார். ஏற்பாட்டை டாக்டர். டி.ராமசுப்பிரமணியன், எஸ் வெங்கட்டர மணி, கே.ஸ்ரீகுமார், வி.ஸ்ரீராமன், ஸ்ரீதரன், சீனிவாசன் ராதாகிருஷ்ணன், ஜோதி வேல், சந்திரசேகரன், சங்கரன் செய்து இருந்தனர்.