காரமடை கோவிலில் பரிவேட்டை வைபவ விழா
ADDED :1029 days ago
மேட்டுப்பாளையம்: காரமடையில் அரங்கநாத சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவேட்டை வைபவ விழாவில் பங்கேற்றார். காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 6ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் முக்கிய விழாவாக, தீ பந்த சேவை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ பந்தம் எடுத்து வந்து, நேர்த்தி கடனை செலுத்தினர். பின்பு இரவு, 10:00 மணிக்கு அரங்கநாத பெருமாள், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தேர் செல்லும் வீதிகள் வழியாக, பரிவேட்டை மைதானத்திற்கு வந்தார். அங்கு பரிவேட்டை வைபவம் விழா நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.