பழநி கோயிலில் 48 நாள் மண்டல பூஜை இன்று சங்காபிஷேகத்துடன் நிறைவு
பழநி: பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜையில் இன்று சங்காபிஷேகத்துடன் நிறைவு பெற உள்ளது.
பழநி கோவிலில், ஜன., 27 கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச்.15) மாலை 6:30 மணிக்கு மேல் கோயில் யாக சாலையில் 1008 சங்குகள் வைத்து, விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை, சங்கு பூஜை, பாராயணம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இணை ஆணையர் நடராஜன், பிச்சை குருக்கள், அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்ரமணியம் குருக்கள் கண்காணிப்பாளர் சந்திரமோகன், பேஸ்கார் வெங்கடேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (மார்ச்.16) காலை 8:30 மணிக்கு, இரண்டாவது கால பூஜை துவங்கும். அதில் பாராயணம் நடைபெறும். காலை 11:00 மணிக்கு பூர்ணாஹூதி, நடைபெறும். உச்சிகாலத்தில் சங்காபிஷேகம், கலசபிஷேகம்,சிறப்பு தீபாதாரணை, அருட்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது.