மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் 100 கோடி நிலங்கள் மீட்க வேண்டும் :பக்தர்கள் கோரிக்கை
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான கோயில். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்து கோயிலில் அம்மனை வணங்குவர். தினமும் மாலை 6:00 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பக்தர்கள் உத்தரவு கேட்பது வழக்கம். தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகின்றது.
குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குல தெய்வமாக நினைத்து ஏராளமான பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த மாதம் எட்டு நாட்களாக நடந்த மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் தமிழகம் மட்டுமல்ல கேரளா, ஆந்திராவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நிலங்கள் மீட்க வேண்டும்: கோயிலுக்குச் சொந்தமான மஞ்சளாறு அணை நீர் பாயும் செழிப்பான 110 ஏக்கர் நிலங்கள் உள்ளது. நஞ்சையில் நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட விவசாயமும், புஞ்சையில் மா தென்னை இலவம் மரம் உட்பட பல்வேறு மரங்கள் உள்ளது. இதில் 60 ஏக்கர் மட்டுமே கோயில் நிர்வாகத்தில் இருந்து குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 100 கோடி மதிப்பிலான 50 ஏக்கர் நிலங்கள், கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு ஏக்கர் வீதம் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்குத்தகைக்கு விட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுவது எப்போது: கோயிலில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு கோவிலுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலங்கள் விவரங்கள் போர்டில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். குத்தகை எடுத்தவர்கள் விபரம், ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களின் விவரமும் போர்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். அங்கு எதுவும் இல்லை. ஆலய பாதுகாப்பு குழுவினருக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. ஆக்கிரமிப்புகளை விரைந்து எடுக்க செயல் அலுவலர் வேலுச்சாமி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கோசாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது: இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடனுக்காக அதிக அளவில் கோ தானம் (பசுமாடு) பக்தர்கள் வழங்க தயாராக உள்ளனர். கோசாலை அமைப்பதற்கு இடங்கள் இருந்தும் செயற்கையாக தட்டிக் கழிக்கும் நிர்வாகம், பசு மாடு வாங்கும் பணத்தை கோயிலுக்கு கொடுத்து விடுங்கள், நாங்கள் கோதானம் கணக்கில் சேர்த்து விடுவதாக பணத்தை சிலர் பங்கு போடுகின்றனர். கோயிலில் இரவில் வாட்ச்மேனை தவிர யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஆனால் சிலர் தங்கி வருகின்றனர். ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் 100 கோடி சொத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.