சாய்பாபா கோவில் சார்பில் புத்தாடை, மளிகை பொருட்கள் வழங்கல்
மதுக்கரை: மதுக்கரை கடை வீதியில் செல்வ வினாயகர், ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும், 30ல் சாய்பாபா ஜெயந்தி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று துவாரகாமாயி .வாழ் ஆனந்த் சாய் டிரஸ்ட் சார்பில், ஏழை பெண்களுக்கு புத்தாடை, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன, திரளான பெண்கள் பொருட்களை பெற்றுச் சென்றனர்.
மேலும் நாளை அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சாய்பாபா ஜெயந்தி விழா துவங்குகிறது. தொடர்ந்து பெருந்திரு மஞ்சனம், பேரொளி வழிபாடு, பாபாவின் சத் சரிதை பாராயணம் நடக்கிறது. மதியம் ஆரதியும், மாலை சத்யநாராயண பூஜையும் நடக்கின்றன. 30 காலை, 6:00 மணிக்கு காகட ஆரதியும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பாபா சத்சரிதை பாராயணம், கோமாதா பூஜை, மதிய ஆரதியும் நடக்கின்றன. மாலை, 4:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் பாபா ஊர்வலம் கடை வீதி, மதுக்கரை மார்க்கெட், அன்பு நகர் வழியாக கோவிலை வந்தடைகிறது. இரவு ஆரதியுடன் விழா நிறைவடைகிறது. விழா முன்னிட்டு பரத நாட்டியம், நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.