சீட்டணஞ்சேரியில் சிதிலமடைந்து வரும் காலீஸ்வரர் கோவில் மண்டபம்
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரியில், சேதமாகி வரும், காலீஸ்வரர் கோவில் மண்டபம் மற்றும் சிதிலமடைந்த மண்டப சிலைகளை சீரமைத்து, பாதுகாக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட, சீட்டணஞ்சேரி கிராமத்தில் ஹிந்து அற நிலைய துறை கட்டுப்பாட்டில், பிரசித்தம் பெற்ற பழமை வாய்ந்த காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தேர் உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைக்கவும் கடந்த காலத்தில் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இம்மண்டபம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. மேலும், மண்டபத்தின் மேல் பகுதியில் உள்ள சுவாமி சிலைகளில் பல பகுதிகள் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, பழமையான காலீஸ்வரர் கோவில் மண்டபத்தை சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.