மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மூக்குத்தி, பரிகார பூஜை
திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த பரிகார பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரம்மாண்டமான குதிரையின் கீழ் ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் மடப்புரம் காளியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 2ம் தேதி அதிகாலை 17 வயது சிறுவன் சுவர் ஏறி குதித்து அம்மன் முகத்தில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு மூக்குத்திகளை திருடிச் சென்றான், சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி., காமிரா காட்சிகளின் அடிப்படையில் மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து அவனிடமிருந்த இரண்டு மூக்குத்திகளை கைப்பற்றி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மடப்புரம் காளிகோயிலில் திருட்டு போன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று காலை கோயில் வளாகத்தில் புஷ்பவனேஷ்வரர் கோயில் பாபு பட்டர் தலைமையில் பரிகார பூஜைகள் தொடங்கின. பரிகார பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 9:15 மணிக்கு 50 நாட்களுக்கு பின் மூக்குத்தி அணிவிக்கப்பட்டது. பரிகார பூஜையில் சிவகங்கை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி, மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதிகோபி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பரிகார பூஜைக்கு பின் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.