ராமேஸ்வரம் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறை யொட்டி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தருகின்றனர். நேற்று ஞாயிறு என்பதால் பக்தர்கள் கூட்டம் கோயிலுக்குள் அலைமோதியது. இதில் இலவச தரிசனத்திற்கு கோயில் மைய மண்டபம் முதல் 3ம் பிரகாரம் வரை 200 மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசையில் நின்றபடி 2 மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மின்விசிறி இல்லாமல், காற்றோட்டமின்றி பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இக்கோயிலில் உண்டியல் காணிக்கை, தரிசனம் டிக்கெட், புனித நீராடல் மூலம் ஓராண்டுக்கு பக்தர்களிடம் ரூ. 30 கோடி வசூலிக்கும் ஹிந்து அறநிலையத்துறை, பக்தர்களுக்கு மின்விசிறி, இருக்கை, ரதவீதியில் போதுமான கழிப்பறை வசதி கூட ஏற்படுத்தாது வேதனைக்குரியது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இவர்களுக்கு அடிப்படை வசதி கூட ஏற்படுத்தாமல் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கிற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.