சேலம் அருகே கோவிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு
தாரமங்கலம்: தாரமங்கலத்தில் பெருமாள் கோவிலில், பஞ்சலோக சிலைகள் திருட்டு போனதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், பழமையான பாவடி பஜனை பெருமாள் கோவில் உள்ளது. செங்குந்த சமுதாய மக்கள் நிர்வாகம் செய்கின்றனர். இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள், நடன கிருஷ்ணர், வெண்ணை தாழி கிருஷ்ணர், நம்மாழ்வார் உள்பட ஒன்பது பஞ்சலோக சிலைகளுக்கு, தினமும் பூஜை, வழிபாடு நடத்தி வருகின்றனர். பூசாரி சக்திவேல் நேற்று காலை, வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமி சிலைகள் திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையிலான போலீசார், கோவிலுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்பகுதி ‘சிசிடிவி’ கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சிலை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர். எட்டு பஞ்சலோக சிலைகளும், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்று, மக்கள் தெரிவித்தனர்.