திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம்
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தை சேர்ந்த இக்கோயிலில் மே 24 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஐந்தாம் திருநாளை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு அம்மன் தவத்திற்கு எழுந்தருளல் நடந்தது. பின்னர் சுவாமி திருநாள் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. பின்னர் தென்மாப்பட்டு சோழிய வெள்ளாளர் உறவின்முறை சார்பில் வேலாயுதசாமி மடத்திலிருந்து திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர். திருமண பூஜைகள், சடங்குகள் நடந்து காப்பு கட்டுதலும், பட்டு வஸ்திரம் சாத்தும் வைபவமும் நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க ரமேஷ், பாஸ்கர குருக்களால் காலை 11:12 மணி அளவில் திருக்கல்யாண திருப்பூட்டு வைபவம் நிறைவு பெற்றது. திரளாக பெண்கள் திருக்கல்யாணத்தை தரிசித்தனர். தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடந்தது. இரவில் யானை வாகனம், பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது.