தேவதானம் நச்சாடை தவித்தருளிய சுவாமி கோயில் தேர்த்திருவிழா
தளவாய்புரம்: சேத்தூர் அடுத்த தேவதானம் நச்சாரை தவிர்க்க வேண்டிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
அன்னை தவம் பெற்ற நாயகி உடனுரை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் பத்து நாள் திருவிழா கடந்த 24 ல் தொடங்கியது. விழாவையொட்டி மூலவர் பெரியாண்டவர், அம்மன் தவம் பெற்ற நாயகிக்கு சிறப்பு அலங்கார பூஜை வழிபாடுகள் நடந்தது. ஒவ்வொரு மண்டக படிதாரர்களால் விழா நடத்தப்பட்டு இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை சுவாமி-அம்பாள் சிறப்பு பூஜையை அடுத்து 9:15 மணிக்கு பரம்பரை அறங்காவலர் துரை ரத்னகுமார் தொடங்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மதியம் 1:30 மணிக்கு தேர் நிலையினை வந்தடைந்தது.பெரிய தேரில் பிரியாவிடையுடன் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி முன் செல்ல, சிறிய தேரில் தவம் பெற்ற நாயகி பெண் பக்தர்களால் ரத வீதியை சுற்றி வந்தனர். தேருக்கு பின் நேர்த்தி கடன் வேண்டி பக்தர்கள் தேர் பாதையில் உருண்டு தங்கள் உடல் பிணி நீங்க வேண்டி நேர்த்தி கடனை செலுத்தினர். ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.