அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்த சுவாமிகளின் குருபூஜை பெருவிழா
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் திருஞானசம்பந்த சுவாமிகளின் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.
இதில் திருஞானசம்பந்த பெருமான் திரு இரும்பூளை தலத்தில் அருளிய 141வது பதிகத்திலிருந்து திருவலிவலம் தலத்தில் அருளிய 200வது பதிகம் வரை சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் அருளிய வரலாற்று முறைப்படி முற்றோதல் நிகழ்ச்சியை திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் மண்டபத்தில் பொல்லபிள்ளையார், நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்த சுவாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.