சஷ்டி: முருகனை வழிபடுங்க.. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்!
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். கந்த சஷ்டி கவசங்களை தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது.