உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அமைச்சர் சேகர்பாபு

கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அமைச்சர் சேகர்பாபு

வேலுார்: ‘‘தமிழகத்தில், கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், உண்டியல் காணிக்கையும் அதிகரித்துள்ளது,’’ என,  ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரியும் செயல் அலுவலர்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில்,  கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோவில்கள், அன்னதான திட்டம், அறநிலையத்துறை, மருத்துவமனை செயல்பாடுகள், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், ஓதுவார் நியமனம், இலவச திருமண திட்டம், உள்ளிட்ட அறநிலையத்துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில், 68 பேர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 84 பேர் நியமிக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் கடந்த, 12 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்த, 180 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கோவில்களின்  பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உண்டியல் காணிக்கை உயர்ந்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணப்படுவதில் வெளிப்படை தன்மை இல்லை என, முன்னாள் முதல்வர் பழனிசாமி  உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அறநிலையத்தறை ஆணையர் முரளிதரன், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !