இறந்த கோவில் மாடுக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு!
ADDED :4764 days ago
மோகனூர்: சின்னபெத்தாம்பட்டியில், இறந்த கோவில் மாடுக்கு, பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, அடக்கம் செய்தனர். மோகனூர் யூனியன், சின்னபெத்தாம்பட்டியில் ஒரு சமூகத்தினர், 21 ஆண்டுகளாக, கோவில் மாடு ஒன்றை பராமரித்து வந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் பூ தாண்டும் விழாவில், தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக, இந்த மாடு பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளது.நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு, அந்த மாடு திடீரென இறந்தது. அதனால், கோவில் மாட்டை பராமரித்து வந்தவர்கள், மாரியம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து, மாட்டுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று மதியம், கோவில் மாட்டை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.