மேல்மலையனுாரில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை : தமிழக அரசு நிறைவேற்ற கோரிக்கை
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய தமிழக அரசு பெரிய அளவிளான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலத்தில் ஒன்றாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவிலாகவும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர் வருகின்றனர். இதில் ஒரு பகுதியினர் இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை வழிபடுகின்றனர். இங்கு நடக்கும் மாசி தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஆடி மாதத்தில் குலதெய்வ நேர்த்தி கடன் செலுத்த எல்லா நாட்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் லட்சக்கணக்கில் குவிகின்றனர். இம்மாதம் 17 ம் தேதி ஆடி அமாவாசையன்று 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தற்காலிக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், ஹிந்து சமய அறநிலையத் துறையினரும் செய்து வருகின்றனர். மேல்மலையனூருக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை நிறை வேற்றியுள்ள திட்டங்கள் யானை பசிக்கு சோள பொறி போன்றே மிக சொற்ப அளவிளானது. கோவில் பகுதியில் மிக குறைந்த எண்ணிக்கையில் தரம் குறைந்த விடுதிகள் உள்ளன. கழிப்பிட வசதியும் மிக மிக குறைவாக உள்ளது. பெரும் பகுதி ஆண்கள் ஏரியையே கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.
14 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த முறை தி.மு.க., ஆட்சியின் போது அமாவாசையன்று சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்த 6 பக்தர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பன் கோவிலில் ஆய்வு செய்து சுற்றுலாத்துறை மூலம் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றார். ஆனால் இதுவரையில் சுற்றுலாத் துறை முலம் எந்த திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் மேல்மலையனுாரில் அதற்கு ஏற்ப சாலைகளை விரிவு படுத்த வில்லை. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழக்கின்றனர். இறந்தவர் உடலை வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் உறவினர் எடுத்து சென்று விடுவதால் இது போன்ற மரணங்கள் வெளியே தெரியாமல் உள்ளது. மேல்மலையனுார் கிராம ஊராட்சியாக இருப்பதால் நிரந்தர துப்பரவு பணியாளர்கள் இல்லை. விழா நாட்களில் மட்டும் தற்காலிகமாக தூய்மை பணியாளர்களை நியமிக்கின்றனர். பல தெருக்களில் முறையான சாலையும், கழிவு நீர் கால்வாயும் இல்லை. அமாவாசையன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வசதி இல்லாததால் இரவில் தெருக்களில் தங்குகின்றனர். மறுநாள் தெருக்கள் கழிவறை போல் காணப்படுகின்றன. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஒவ்வொரு விழாவின் போதும் தற்காலிக ஏற்பாடுகளுக்காக பல கோடிகளை செலவு செய்கின்றனர். இதில் அதிக அளவில் முறைகேடுகள் நடக்கிறது. பக்தர்களுக்கு முழுமையான பயன் கிடைப்பதில்லை. மிகப் பெரிய ஆன்மீக ஸ்தலத்திற்கு ஏற்ப இங்கு திட்டங்களை நிறை வேற்ற வேண்டும். கோவில் அருகில் கூட்டம் சேர்வதை தடுக்க புதிய வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
மேல்மலையனூரில் பக்தர்கள் குவிவதை தடுக்க மேல்மலையனூருக்கு வருவதற்கு 3 கி.மீ., முன்பாக வளத்தி, அவலுார்பேட்டை, சிறுதலைப்பூண்டி, ஈயகுணம், கோட்டப்பூண்டி சாலைகளில் வழி நெடுகிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கழிவறைகளை கட்ட வேண்டும். அதே போல் ஊருக்கு வெளியே நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான கட்டணத்துடன் கூடிய பிரம்மாண்டமான தங்கும் விடுதிகளை அனைத்து சாலைகளிலும் கட்ட வேண்டும். திருமணம், காது குத்து நிகழ்ச்சிகள் நடந்த ஹிந்து சமய அறநிலையத் துறை மூலம் புதிதாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சமுதாய கூடங்களை கட்ட வேண்டும். வளத்தி சாலையில் நவீன வசதிகளுடன் அதிக பஸ்கள் நின்று செல்லும் வகையில் பஸ் நவீன நிலையம் அமைக்க வேண்டும். கோவில் அருகே வரை பக்தர்கள் எளிதாக வந்து செல்ல சாலைகளை விரிவுபடுத்தி மின் விளக்குகளுடன் புதிதாக சிமெண்ட் சாலைகள் அமைக்க வேண்டும். மேல்மலையனுாரை சுற்றி உள்ள அனைத்து சாலைகளையும் வட்ட சாலை மூலம் இணைக்க வேண்டும். மேல்மலையனூருக்கென தனியாக குடிநீர் திட்டம் தயாரித்து போளூர் அல்லது தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள நிலையே நீடித்தால் பக்தர்களின் அவதி நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே தமிழக அரசு மேல்மலையனூரில் அடிப்படை வசதிகள் மேம்படவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் மெகா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.