உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவலம் கோயிலில் பூக்குழி திருவிழா துவக்கம்!

கரிவலம் கோயிலில் பூக்குழி திருவிழா துவக்கம்!

திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா துவங்கியது. கரிவலம் வந்தநல்லூர் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன், காளியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 2ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன்களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இத்திருவிழா வரும் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் மதியம் அம்மன்களுக்கு பல்வேறு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 5ம் திருநாளன்று மதியம் அன்னதானம், இரவு அம்மன் திருவீதியுலா நடக்கிறது. 6ம் திருநாளன்று மதியம் அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவு குடை சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா, வில்லிசை ஆகியன நடக்கிறது. 7ம் திருநாளன்று மதியம் விநாயகருக்கு சந்தனக்காப்பு, இரவு அம்மன்களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 8ம் திருநாளன்று மதியம் குற்றாலம் தீர்த்தம் கொண்டு வந்து பக்தர்கள் பவனி வருதல், பின் அம்மன்களுக்கு தீர்த்தம், அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு மேல் ஆயிரங்கண் பானை, முளைப்பாரி, அக்னிசட்டி, மேளதாளத்துடன் அம்மன் திருவீதியுலா நடக்கிறது.

9ம் திருநாளன்று பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், அம்மன் அழைப்பு, பூ வளர்த்தல் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு மேல் மேளதாள வாணவேடிக்கையுடன் பூ இறங்கும் பக்தர்கள் புடைசூழ அம்மன் திருவீதி வந்து பக்தர்கள் பூ இறங்குதல் நடக்கிறது. இரவு கயிறு குத்துதல், நையாண்டி மேளம், கரகாட்டம் நடக்கிறது. திருவிழாவின் இறுதிநாளான 11ம் தேதி மாலை அம்மன்களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கரிவலம் வந்தநல்லூர் இந்துநாடார் உறவின் முறையினர், விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !