திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கல்வெட்டு படி எடுக்கும் பணி
திருக்கோவிலூர்: தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கல்வெட்டு படி எடுக்கும் பணி நடந்து வருகிறது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறை சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொன்மையான கல்வெட்டுக்கள் உள்ளது. குறிப்பாக ராஜராஜ சோழனின் தாய் வானமாதேவி திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் என்றும், ராஜராஜன் சோழன் திருக்கோவிலூரில் பிறந்து, வளர்ந்தார் என்பதற்கான ஆதார கல்வெட்டு மற்றும் சங்கப் புலவர் கபிலர் குறித்த கல்வெட்டுகளும் உள்ளது. தொன்மையான கல்வெட்டுகளை படியெடுக்க தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டத் தொல்லியல் அலுவலர் சுரேஷ் தலைமையில், கல்வெட்டு சிற்றெழுத்தர்கள் ஜோதி, ஞானபிரகாசம், மகாராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்தனர். கோவில் எழுத்தர் மிரேஜ்குமார், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன், தணிகை கலைமணி உள்ளிட்ட பலரும் வரவேற்று உதவி செய்தனர்.