உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்ஞானகிரி மலையில் ஆடிக் கிருத்திகை விழா; குவிந்த பக்தர்கள்

விக்ஞானகிரி மலையில் ஆடிக் கிருத்திகை விழா; குவிந்த பக்தர்கள்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான  விக்ஞானகிரியில் அமைந்துள்ள வள்ளி தேவயானை சமேத சுப்ரமணியசுவாமி கோயிலில் இன்று ஆடிக் கிருத்திகை விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி அம்மனை தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். 

விக்ஞானகிரி மலையில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய ஸ்ரீகாளஹஸ்தி நகர பக்தர்கள் மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்தும் (சுமார் 50 ஆயிரம்) பக்தர்கள் குவிந்தனர். இதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  கோயிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டும், குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தன.  மேலும், வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு நுழைவு வாயில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். கோயிலுக்கு வந்த  பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையிலும், சர்வதரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முன்னதாக கோயில் அருகில் உள்ள நாரத புஷ்கரணி (குளத்தில்) புனித நீராடி தலைமுடி காணிக்கை செலுத்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நகருக்குள் வரும் பேருந்துகளை மாற்றி பைபாஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் போலீசார் ஏற்பாடு செய்தனர் . ஆடி கிருத்திகை விழாவையொட்டி பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய உதவியாக காளஹஸ்தி நகர மற்றும் புறநகர் போலீசார் மற்றும் சாரணியர் படையினர் பக்தர்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் காளஹஸ்தி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோயில் அதிகாரிகள் உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !