புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக நடைமேடை அமைப்பு
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக சன்னதிமுன் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம், மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்த பின் பக்தர்கள் புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் சன்னதியில் புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்ய வசதியாக சன்னதி முன் உயரமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட வசதியாக சன்னதி முன் நடைமேடை அமைத்துள்ளனர். இதனால் அனைத்து பக்தர்களும் நடைமேடையில் ஏறி சுவாமியை மனமுருக தரிசனம் செய்யலாம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்திலும் இதுபோன்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு நடைமேடை அமைத்துள்ளது,என்றனர்.