குருவித்துறையில் திருக்கல்யாணம்; பக்தர்கள் பரவசம்
ADDED :823 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் கடந்த 2018ல் திருடுபோன உற்ஸவர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்தது. பின் கிராமவிழா கமிட்டி மற்றும் ஹிந்து சமய அறநிலைய துறை முயற்சியில் உற்ஸவர் சிலைகளின் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டது. ஆகம விதிப்படி உற்ஸவ சிலைகளுக்கான யாக பூஜைகள் செப்.,3ல் துவங்கின. இன்று காலை எம்.எல்.ஏ., வெங்கடேசன் முன்னிலையில் பட்டர்கள் சடகோபர், பாலாஜி, ராஜா, ரங்கநாதன் ஸ்ரீதர் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகள் செய்து மாப்பிள்ளை, பெண் விட்டார் அழைப்பு நடத்தினர். பின் ஸ்ரீதேவி, பூதேவி உடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு திருமாங்கல்யம், பிரசாதம் வழங்கப்பட்டது.