சூலூர் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
சூலூர்: லட்சுமி நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த நீலம்பூர் லட்சுமி நகர் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 8 ம்தேதி விநாயகர் வழிபாடு, முளைப்பாரி, தீரத்தக்குடம் எடுத்து வருதலுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை, முதல்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. மறுநாள் இரண்டு கால பூஜைகள் முடிந்து , தெய்வ திருமேனிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 7:30 மணிக்கு, ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயர், நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.