ஞானமே மோட்சத்துக்கு வழி; ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்
ஆனைகட்டி: ஞானமே மோட்சத்துக்கு வழி என, சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசினார்.
ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது. இதில், சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசுகையில்," பகவத் கீதை வாழ்க்கைக்கு தேவையான, 20 அறநெறிகளை எடுத்துக் கூறுகிறது. அவற்றில் முக்கியமானவை தற்பெருமை இன்மை, ஆடம்பரம் இன்மை, அகிம்சை, பொறுமை, நேர்மை, குருவுக்கு பணிவிடை செய்தல், தூய்மை மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறது. அறநெறிகளைதான் தர்மம் என்ற சொல் குறிக்கின்றது. உடல் அழியக்கூடியது. ஆன்மா அழியாதது. நான் என்பது உடல், மனம், புத்தி மற்றும் இந்திரியங்களின் தொகுப்பு அல்ல. நான் என்பது ஆன்மா அதாவது, இருப்பாக, பேரறிவாக, பூரணமாக உள்ள பிரம்மம் என்று அறிவதே வேதங்கள் புகட்டும் அறிவு. அதுவே ஆத்ம ஞானம் ஆகும். எவர் தர்ம நெறியில் வாழ்கின்றாரோ, அவருக்கு அது வாய்க்கும். ஞானமே, வீடு பேறு எனும் மோட்சத்திற்கு வழி வகுக்கும். இந்த ஞானம் அழிவற்றது. சனாதனம், என்பது என்றும் இருப்பது என்று பொருள்படும். அதை அடிப்படையாகக் கொண்டு, நற்பண்புகளை கடைப்பிடித்து, வாழும் வாழ்க்கை முறையே சனாதான தர்மம் என்று அழைக்கப்படுகிறது. காலம், தேசம் என்ற வரையறைகளை கடந்த இந்த ஞானத்தை அறிந்து கொண்டால், அனைவரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழலாம்" என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆர்ஷ அவினாஷ் பவுண்டேஷனை சேர்ந்த அவினாஷ் செய்திருந்தார். தியானம், சிரிப்பு யோகா வகுப்புகள் நடந்தன. நிகழ்ச்சியில், பொன்மணி அவினாஷ் உள்ளிட்ட திரளான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.