அமெரிக்காவில் அறுபடை முருகன் கோயில்; சிலை பிரதிஷ்டை .. திருப்புகழ் பாடல் பாடி பக்தர்கள் பரவசம்
செயின்ட் லூயிஸ்; அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரத்தில் அறுபடை முருகன் கோயில் கட்டப்பட உள்ளது. முருகன் கோவிலுக்கு 15 ஏக்கர் இடம் வாங்கி முதல் கட்டமாக விநாயகப் பெருமானுக்கும் வேலுக்குமான முதல் பிரதிஷ்டை கடந்த ஆக.,27 ம்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, அந்நன்னாளில் பிள்ளையாருக்கும் வேலுக்கும் அருகில் ஸ்தல விருக்ஷ மரத்தை நட்டு பூஜையும் செய்தார்கள். பிள்ளையாரையும் வேல் சிலையும் இந்தியாவிலிருந்து வரவழைத்து 24 நாட்கள் நெல்லில் வைத்து (தான்ய வாசம்) மற்றும் 24 நாட்கள் தண்ணீரில் வைத்தார்கள் (ஜலாதி வாசம்). பிரதிஷ்டை நிகழ்வின் போது, ஐந்து உலோகத் துண்டுகள் (ஐம்பொன் தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம் மற்றும் இரும்பு) பீடங்களில் நவரத்தனங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டன. பிறகு, விக்ரஹங்கள் திரிபந்தனம் (சுண்ணாம்பு, வெல்லம் மற்றும் பழுத்த வாழைப்பழம்) பசையுடன் பீடத்துடன் இணைக்கப்பட்டன. பின் விக்ரஹங்களின் கண் திறப்பு நடைபெற்றது. கண்கள் திறந்தவுடன் முதலில் கண்ணாடியையும், காமதேனு பொம்மைகளையும், 5 சிறுமிகளையும், 7 பிரம்மச்சாரி சிறுவர்களையும், 5 தம்பதிகளையும் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். திரபந்தன பிரதிஷ்டையை தொடர்ந்து வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, முருகன் போற்றி நடந்தது. அபிஷேகத்தின் போது, புதிய தெய்வங்களின் மீது இரண்டு கழுகுகள் பறந்தன. இதை பார்த்த பக்தர்கள் பரவசத்தில் தரிசனம் செய்தனர்.
கோயில் வளாகத்தில் உள்ள புனித மரத்தைக் குறிக்கும் "ஸ்தல விருக்ஷம்" கோயில் கட்டப்படுவதற்கு முன்பு கோயில் தளத்தில் காணப்பட்ட பூர்வீக மரமாகும். கோவில் கட்டுவதற்கு நிலத்தை சீரமைப்பு செய்வதற்கு முன், அந்த நிலத்தின் பூர்வீக குடிகளை கௌரவிப்பது பாரம்பரியமாகும். அறுபடை முருகன் கோவிலுக்கு பருத்தி மரத்தை ஸ்தல விருக்ஷமாக தேர்ந்தெடுத்தார்கள். பருத்தி மரத்தின் இலை இந்தியாவில் காணப்படும் அரச மரத்தின் இலை போலவே இருப்பது சிறப்பு அம்சமாகும். பருத்தி மரங்கள் மிசௌரி நதி சுற்றுச்சூழல் அமைப்பின் இன்றியமையாத பகுதியாகும், பல உயிரினங்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவை வழங்குகின்றன. பல ஸ்தல விருக்ஷங்களைப் போலவே, இது மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது- பூர்வீக அமெரிக்கர்கள் அதன் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை நோய்களை குணப்படுத்தும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.
முருகன் கோவிலின் சண்முக பதிகம் என்ற புதிய ஸ்தல பாடலை வெளியிட்டார்கள். சைவ ஆகமத்தில் 250 க்கும் மேற்பட்ட கோவில்கள் பாடல் பெற்ற தலங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 13 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் 16,000 க்கும் மேற்பட்ட திருப்புகழ் பாடல்களை முருகனின் 216 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று ஒவ்வொரு கோவிலில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மூலவர் சன்னதியின் முக்கியத்துவத்தை பாடியுள்ளார். இந்த பாடல்கள் நிலப்பரப்புகள் மற்றும் சிவாலயங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு கருத்தியல் நோக்குநிலையை வெளிப்படுத்துகின்றன. அதேபோல் செயின்ட் லூயிஸ் முருகன் கோவிலிலும் தலைசிறந்த பாடகி பத்து வெவ்வேறு ராகங்களில் (ராகமாலிகா) இசையமைத்து பாடினார்கள். செயின்ட் லூயிஸில் உள்ள திறமையான கலைஞர்கள் இசையமைக்கவும் பதிவு செய்யவும் ஒன்று கூடி பாடலை வெளியிட்டார்கள். முருக பக்தர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவும் அன்னதானமாக வழங்கப்பட்டது. சிறப்பு அம்சமாக பழனி பஞ்சாமிர்தமும் பிரசாதமாக கொடுக்கப்பட்டது. ஏராளமான தன்னார்வாலர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உமா நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.