கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
உடன்குடி: கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உடன்குடி அருகே கொட்டங்காடு தேவிஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் ஊர்வலம், காலை 9 மணிக்கு கொடியேற்றம், தொடர்ந்து அலங்கார பூஜைகள், அன்னதானம், அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கொட்டங்காடு மற்றும் உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் மாலை வரை அம்மன், பவளமுத்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல்சேவை, அம்பாள் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி சப்பர பவனி,வில்லிசை, திருவிளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. வரும் 29ம் தேதி இரவு 1 மணிக்கு அம்பாள்,விநாயகர் பூஞ்சப்பரங்களில் தெரு பவனி வந்து வரும் 30ம் தேதி இரவு 11 மணிக்கு மீண்டும் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தர ஈசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.