சுகவனேஸ்வரர் கோவிலில் மொபைலுக்கு தடை; பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு
சேலம்; சுகவனேஸ்வரர் கோவிலில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருச்செந்துார் சுப்ரமணியர், பழனி கோவில்களில் தரிசிக்க செல்லும்போது பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல, நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 1ல் பழனியில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை கோவில்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அதற்கான முன்னேற்பாடு பணி நடக்கிறது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் சமீபத்தில் மண்டல இணை கமிஷனர், உதவி கமிஷனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பக்தர்கள் மொபைல் போனை கோவிலுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. மீறி கொண்டு சென்றது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். ‘மொபைல் திருப்பி வழங்கப்படாது’ என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை, கோவில் நுழைவாயில்களில் பக்தர்கள் அறியும்படி வைக்க வேண்டும். கோவில் வளாகத்தில் மொபைல் போனை பெற்று பாதுகாத்து வைக்க, பாதுகாப்பு பெட்டக வசதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். போனை பெற்று, ‘டோக்கன்’ வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பாதுகாக்க, ஒரு மொபைலுக்கு, 5 ரூபாய் சீரான தொகை வசூலிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் போன் பாதுகாப்புக்குரிய இடத்தை ஒதுக்கி நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.