ஐந்து கிலோ ருத்ராட்ச மாலையுடன் மீனாட்சி அம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்த வடமாநில சாமியார்
கீழடி: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இன்று ஐந்து கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலையுடன் சென்ற இமாச்சல பிரதேச சாமியார், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொண்டார்.
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தினசரி ஏராளமான வடமாநில பக்தர்கள் கார், வேன், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ராமேஸ்வரம் செல்வது வழக்கம். இதில் இமாச்சல பிரதேசம் கேதர்நாத் பகுதியைச் சேர்ந்த சாமியார் கழுத்தில் ஐந்து கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசியும், கோவணம் அணிந்து கையில் திரிசூலம், உடுக்கை உள்ளிட்டவற்றுடன் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொண்டார். நான்கு வழிச்சாலையில் டூவீலர், வேன், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சாமியாரிடம் ஆசி பெற்றனர். யாரிடமும் பணம் உள்ளிட்ட எந்த பொருளையும் வாங்க மறுத்த அவர் அனைவரையும் பொறுமையாக ஆசி வழங்கினார். தண்ணீர், பழங்கள் மட்டுமே அருந்தி உயிர் வாழும் இவர் எங்கு சென்றாலும் நடைபயணமாகவே செல்வது வழக்கமாம். கடந்த ஒன்பது மாதங்களாக நடந்து வருகிறார். காலை நான்கு மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை நடப்பது அதன்பின் ஓய்வு எடுப்பது என செல்கிறார். பெயர் சொல்ல மறுத்துவிட்டார். ஒருசில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார். கையில் எந்த வித ஆவணமும் இல்லை, மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தி விட்டு திருச்சி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.