உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி அருகே 10ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

காரியாபட்டி அருகே 10ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

காரியாபட்டி: காரியாபட்டி டி. கடமன்குளத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

காரியாபட்டி டி. கடம்பன்குளத்தில் கண்மாய்க்கரையில் கருப்பசாமி கோவில் பின்புறம் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, அழகுபாண்டி தகவலில், உதவிப்பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் கள ஆய்வு செய்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் என தெரிந்தது. அவர்கள் கூறியதாவது, அய்யனார் சிற்பம் 2.5 அடி உயரத்தில், தலையில் கிரீடத்துடன் அகன்ற ஜடாபாரம், நீண்ட காதுகளில் பத்ரகுண்டலங்கள், வலது கரத்தில் மலர் செண்டை, இடது கரத்தின் கீழே தொங்கவிட்டும், அரை ஆடையுடனும், இடது காலில் யோகப்பட்டையுடன் முற்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்தில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் வலது, இடது முறையே பூர்ணகலை, புஷ்பகலை சிற்பங்கள் ஆடை ஆபரணங்களுடன் சுகாசன கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பங்களின் கைகளில் மலர் செண்டை பிடித்தபடி அழகாக வடிக்கக்பட்டுள்ளது. வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் அய்யனார் வழிபாடு சிறந்து விளங்கியிருக்க வேண்டும். தற்போதும் இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !