ராகு, கேது பெயர்ச்சி பூஜை; சிவன் நெற்றியில் ராகு..!.. வணங்கிட வளம் பெருகும்
பத்தமடை: கரிசூழ்ந்தமங்கலம் தென் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 8ம் தேதி ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.
முன்னொரு காலத்தில் கைலாயத்தில் துர்வாச மகரிஷி, பிரம்மன் சபையில் வேதம் சொன்னார். ஒரு கட்டத்தில் அவர் தவறாக கூறிய போது கல்விக்கடவுள் சரஸ்வதி சிரித்தார். ஆத்திரமடைந்த துர்வாசர் சரஸ்வதியை சபித்தார். உடனே பிரம்மன், ‘உன் தவ வலிமை அழியும்’ என துர்வாசரை சபித்தார். தற்போதைய ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் சுவர்ணமுகி புனித நதியில் நீராடி அங்குள்ள சிவலிங்கத்தை பூஜித்து வழிபட வேண்டும், காளஹஸ்தியில் சிவலிங்கத்தை பூஜித்த அர்ச்சனை மலர்கள் தாமிரபரணி நதியில் எங்கு தெரிகிறதோ அங்கு தான் கொடுத்த சிவலிங்கத்தை பூஜை செய்தால் சாப விமோசனம் கிடைக்கும் என பிரம்மன் துர்வாசரிடம் கூறினார். அதன்படி, கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் கரிசூழ்ந்தமங்கலம் தாமிரபரணி நதியில் காளஹஸ்தியில் அர்ச்சனை செய்த மலர்கள் துர்வாசருக்கு தெரிந்தன. அங்கு தென்கரையில் சிவலிங்கத்தை ஓராண்டு பூஜித்து துர்வாசர் வழிபட்டார். துர்வாசரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் தற்போது கரிசூழ்ந்தமங்கலம் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ளது. காளஹஸ்தியில் இருந்து நதியில் அர்ச்சனை மலர்கள் வந்த இடம், துர்வாச தீர்த்தக்கட்டம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் சுவாமி (சிவன்) நெற்றியில் ராகு, அம்பாள் (ஞானாம்பிகை) இடுப்பு ஒட்டியாணத்தில் கேது இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே இங்கு ராகு, கேது பெயர்ச்சி நாள் சிறப்பு பூஜையில் மக்கள் திரளாகக் கலந்து கொள்வர். காளஹஸ்தி கோயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் இங்கு வருவர்.
8ல் சிறப்பு பூஜை; கோயிலில் 8ம் தேதி மதியம் 2;19 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்திற்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னிக்கும் இடப்பெயர்ச்சி ஆவதையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று காலை 7:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை, ராகு, கேது மூல மந்திர ஜபம், சிறப்பு ஹோமம், பூஜை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இங்கு தாமிரபரணி நதி, துர்வாச தீர்த்தக்கட்டத்தில் மக்கள் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை, தொழில், வேலைவாய்ப்புத்தடை நீங்கும், வாழ்வில் வளம் பெருகும் என்பது ஆன்மிக ஆர்வலர்களின் நம்பிக்கை.