திருப்பதி ஏழுமலையானுக்கு பூக்கள் தொடுக்க அழைப்பு!
சேலம்: திருப்பதி, திருமலை ஸ்ரீவாரி மகா நவராத்திரி, இரண்டாவது பிரம்மோற்சவசத்திற்கு, 17ம் தேதி பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், கலந்து கொள்ளுமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பதி, திருமலையில் ஸ்ரீவாரி மகா நவராத்திரி, 2வது பிரம்மோற்சவம் அக்டோபர், 15ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்கு தேவையான மலர் மாலைகள், சேலம் திருமலை வேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் தொடுத்து அனுப்பப்படுகிறது.வரும் 19ல், நடக்க உள்ள கருடசேவை நிகழ்ச்சிக்காக, மலையப்ப சாமியை அலங்கரிக்க சாமாந்தி, மேரிகோல்டு, அஸ்ட்ரே போன்ற பூக்கள், சரங்களாகவும், மாலைகளாகவும் தொடுத்து அனுப்பப்பட உள்ளது. பூக்களை தொடுக்க விரும்பும் பக்தர்கள், நாளை காலை, 7.30 மணி முதல், பகல், 2 மணிவரை, சேலம் டி.ஆர்.எஸ்., திருமண மண்டபத்தில் நடக்கும் பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். மேலும், தகவல் பெற விரும்புவோர், 94421-51015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.