உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் நவ., 23ல் கோலாகலம்

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் நவ., 23ல் கோலாகலம்

மதுரை; மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயிலின் ராஜகோபுரத்திற்கு நவம்பர் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர். அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள்.மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.   இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர் ஆனார். இத்தகைய சிறப்பு மிக்க இங்கு கடந்த 13.3. 2022 அன்று பாலாலய பூஜையுடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காணப்படும் ராஜகோபுரத்திற்கு நவம்பர் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !