சென்னிமலை குறித்து சர்ச்சை பேச்சு; கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி ஜோசப் கைது.. ஸ்டீபனை தேடும் போலீசார்
சென்னிமலை: சென்னிமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முருகன் மலை பற்றியும், ஹிந்துக்கள் பற்றியும் தரக்குறைவாக பேசிய, செங்கல்பட்டு கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி நேற்று கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், ஜான் பீட்டர் என்பவர் வீட்டில், மதமாற்றம் செய்யும் நோக்கில் அனுமதியின்றி வெளி மாவட்ட ஆட்களை அழைத்து வந்து, கிறிஸ்தவ அமைப்பு சார்பில் தொடர்ந்து ஜெபக்கூட்டம் நடத்தி வந்தனர்.
இவர்கள் ஒலி பெருக்கி மூலம் ஜெபக்கூட்டம் நடத்துவது மட்டுமின்றி, ஹிந்து தெய்வங்களை சாத்தான் என கூறி இழிவுப்படுத்தி பேசி வந்துள்ளனர். இது, அந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்., 17ல் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது, ஹிந்து முன்னணி அமைப்பினர் ஒன்று திரண்டு சென்று, கூட்டம் நடத்திய நபர்களிடம் அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் கூட்டம் நடத்த வேண்டாம் என, கூறியுள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கிறிஸ்தவர்கள் கொடுத்த புகார்படி, ஹிந்து அமைப்பினர் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகள் சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, வழக்கு போட்டால் இரு தரப்பினர் மீதும் போட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட பல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஜான் பீட்டர் என்பவர் கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார், சின்னசாமி, அவரது மகன் கோகுல் மற்றும் ஹிந்து முன்னணியை சேர்ந்த தமிழரசன், பூபதி ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தமிழரசன், பூபதியை கைது செய்தனர். கடந்த மாதம், 26 அன்று சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் கிறிஸ்தவ முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நபர்கள், கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவில் மலையை கல்வாரி மலையாக (கிறிஸ்தவ மலையாக) மாற்றுவோம் என, பேசினர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கிறிஸ்தவ முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னிமலையில் ஹிந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பல ஆயிரம் பேர் மேற்பட்டோர் திரண்டனர்.