வடபழனி கோவிலில் செல்வ வளம் தரும் கெஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன. மாலை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது. நேற்று மாலை, ரசிகப்பிரியா இசைப்பள்ளி குழுவினரின், சன்னிதியில் சங்கீதம் கதாகாலட்ஷேபம் நடந்தது. தொடர்ந்து, சுதா சேஷய்யனின் பக்தி சொற்பொழிவு நடந்தது. இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவில் இன்று மாலை 4:15 மணிக்கு, 108க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்கின்றனர். வரும் 22ம் தேதி, உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை கொலு சன்னிதியில் நடக்கிறது.