பொருளாதார வளர்ச்சிக்கு ஆன்மிகம் பெரிதும் உதவியாக உள்ளது:அமைச்சர் வேலு பேட்டி
திருவண்ணாமலை; ‘‘திருவண்ணாமலை நகர வளர்ச்சிக்கு, ஆன்மிகம் பெரிதும் உதவியாக உள்ளது,’’ என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் முன் கடைகள் கட்ட கால்கோள் விழா நடந்தது. வேதவிற்பன்னர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித கலச நீரை ஊற்றி, கால் கோல் விழாவை அமைச்சர் வேலு தொடங்கி வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு முன்பகுதியில் உள்ள கடைகள் தற்காலிகமாக இருந்தது. இவை நிரந்தரமாக கட்டி தர முதல்வர் முடிவு செய்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கூறி, அறநிலையத்துறை நிதியிலிருந்து, 6.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்து, அதற்கான கால்கோள் விழா நடத்தப்படுகிறது. ஏற்கனவே, இங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திராவிட மாடல் ஆட்சி, ஆன்மிகத்தை பிரித்தே பார்க்க முடியாது. ஏற்கனவே, பா.ஜ., ஆட்சியில் இந்த கோவிலை, தொல்லியல் துறை கையகப்படுத்த முடிவு செய்தது. அப்போது ஜக்மோகன் என்பவர் அமைச்சராக இருந்தார். மீண்டும் காங்., ஆட்சிக்கு வந்தவுடன், அதில் அங்கம் வகித்த தி.மு.க., அன்றைக்கு இருந்த காங்., மத்திய அமைச்சராக இருந்த ஜெயபால் ரெட்டியிடம் கூறி, தொல்லியல் துறை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்தி, மீண்டும் திருவண்ணாமலை கோவில் ஆன்மிக மக்களிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவிலை தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தால், இங்குள்ள மக்களுக்கு வேலை இல்லாமல் போயிருக்கும். இன்று மாதந்தோறும் கிரிவலம் என்ற பெயரிலே, நான்கு லட்சத்திலிருந்து, 10 லட்சம் பேர் திருவண்ணாமலை வருகின்றனர். இது, பெரும்பான்மையானவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இன்றைய முதல்வர், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு எல்லாம், கும்பாபி ேஷகம் செய்யும் பணிக்கு முன்னுரிமை அளிக்கிறார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. கவர்னர் மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் பாலமாக இருந்து பணியாற்ற வேண்டும். இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசிடம் கூறி மாநில அரசின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால், மாநில அரசுக்கு இருக்கின்ற உரிமைகளை கூட, நாங்கள் கோப்பின் மூலமாக அனுமதி பெற வேண்டும் என்ற போது முட்டுக்கட்டையாக உள்ளார். ரவி என்றைக்கு தமிழகத்துக்கு கவர்னராக வந்தாரோ, அன்று முதல் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களுக்கு எல்லாம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.