கோவில்களில் இசை நிகழ்ச்சியுடன் நவராத்திரி உற்சவம் துவக்கம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி உற்சவம் நேற்று முன் தினம் இசை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
செங்கழுநீர் அம்மன் கோவில்: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு நவராத்திரி உற்சவம் நேற்று முன் தினம் துவங்கியது. மாலை 6 மணிக்கு தவில் இசை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது.
சாரதாம்பாள் கோவில்: புதுச்சேரி இசை, நாட்டியக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நவராத்திரி விழா எல்லப்பிள்ளைச் சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் துவங்கியது.விழாவை ராஜமணிக்கம், ஜெகதீசன், அழகு ராமசாமி துவங்கி வைத்தனர். மாலை 5.30 மணிக்கு ராஜேஸ்வரி மற்றும் ராகமாலிகா குழுவினரின் பாட்டும், அபிநய வர்ஷினி கலை மையம் சார்பில் பரதமும், இரவு 8 மணிக்கு புதுச்சேரி தமிழ்ச் சங்க மாணவர்களின் பரதம் நடந்தது.
பெரியபாளையத்தம்மன் கோவில்: முத்தியால்பேட்டை, பெல்கீஸ் வீதி பெரியபாளையத்தம்மன் கோவில் நவராத்திரி உற்சவம் துவங்கியது. சுவாமி ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பேட்டையான்சத்திரம்: திரிபுராசுந்தரி உடனுறை சிவசடையப்பர் சுவாமி கோவிலில் 13ம் ஆண்டு சாரதா நவராத்திரி மகா உற்சவம் துவங்கியது.நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தேவதா அனுக்ஞை, கலச ஸ்தாபனம், துர்கா கணபதி ஹோமம் நடந்தது. மகா பூர்ணாஹூதி நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சிவ துர்கை அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.