550 ஆண்டுகளாக குடிசையில் இருந்த ராமரை கோபுரத்தில் வைக்கிறோம்: அமித்ஷா நெகிழ்ச்சி
ஐதராபாத்: கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் ராமருக்கான பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை டிச.,3ல் நடக்கிறது. இதற்காக ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்), காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஐதராபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியோ, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியோ எந்தவித வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் இங்கு வளர்ச்சியை கொண்டுவந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமா ராவ்வை முதல்வராக நினைக்கிறார், சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். தெலுங்கானாவில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக நியமிக்க முடிவு செய்துள்ளோம். கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் அடுத்தாண்டு ஜன.,22ம் தேதி ராமருக்கான பிரமாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி அதனை திறந்து வைத்து தரிசனம் செய்ய உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.