அறங்காவலர் நியமனத்தில் இழுபறி; திருப்பணி தொய்வால் பக்தர்கள் அதிருப்தி
அன்னூர்; அன்னூர் தாலுகாவில், பழமையான கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்காததால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அன்னூர் தாலுகாவில், மிகப் பழமையான பல கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ளன. இக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு நியமிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் கோவில்களுக்கு அறங்காவலர்கள் இது வரை நியமிக்கப்படவில்லை. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. இதே போல் 400 ஆண்டு பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடந்து வருகிறது. அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற குன்றின் மீது முருகப்பெருமான் அமர்ந்துள்ள குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இதுவரை அறங்காவலர் நியமிக்கப்படவில்லை. கோவில்பாளையம் கோவில் உள்பட அன்னூர் தாலுகாவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது, என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டால் கட்டளைதாரர்கள் ஒத்துழைப்போடு திருப்பணிகள் விரைவாக நடைபெறும். தேரோட்டம் உள்ளிட்ட விழாக்களும் விமர்சையாக நடைபெறும். இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.