உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் சூரனை வதம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கினார் முருகப்பெருமான்

திருமலைக்கேணியில் சூரனை வதம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கினார் முருகப்பெருமான்

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் வேல் வாங்கும் அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மாலை சூரசம்ஹாரம் நடக்கும்.

நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி விழா கடந்த நவ.13 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5ம் நாளான இன்று மூலவருக்கும், உற்சவருக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாரதனைகள் நடந்தது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் கோலத்தில் எழுந்தருளிய சுவாமி கோயில் வளாகத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை சதாசிவ குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை  மாலை 4:30 மணிக்கு முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !