உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசஷ்டி விழா: திருப்புத்தூரில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழா: திருப்புத்தூரில் சூரசம்ஹாரம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நவ.13 ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி உற்ஸவருக்கு அலங்காரமும், இரவு  6:30 மணிக்கு  மூலவர் முருகனுக்கு அபிஷேக,ஆராதனைகளும் நடந்தது. இன்று ஆறாம் திருநாளை முன்னிட்டு காலை 11:30 மணிக்கு  மூலவர் முருகன்  வள்ளி தெய்வானைக்கு 16 வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  முருகன் சந்தனக் காப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் அலங்காரத் தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4:30 மணிக்கு உற்ஸவ முருகன் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினார்.  தீபாராதனைக்கு பின் உற்ஸவர் புறப்பாடாகி சிவகாமி அம்மன் சன்னதிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனிடமிருந்து பூஜிக்கப்பட்ட வேல் உற்சவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் முருகன் கோயிலிலிருந்து புறப்பாடாகி தேரோடும் வீதியில் எழுந்தருளினார். அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம், மயில், சேவல், சூரன் வடிவில் உருமாறிக் காட்சி அளிக்க இறுதியாக முருகன் சூரன் தலையை கொய்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார். மழை பெய்தும் திரளாக பக்தர்கள் கூடி சூரசம்ஹாரத்தை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !